நீலகிரியில் மருந்துகளை தபாலில் அனுப்பும் வசதி
பொதுமுடக்கம் காரணமாக மருந்துகளை தபாலில் அனுப்பும் வசதி நீலகிரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக மருந்துகளை தபாலில் அனுப்பும் வசதி நீலகிரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ஜெயகீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய உள்துறை அமைச்சகத்தின் நிபந்தனைகளின்படி தபால் துறை அத்தியாவசிய சேவை துறையின் கீழ் இயங்கி வருகிறது. கரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீலகிரியில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள், பேருந்துகள் மூலம் முகக் கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக மருந்துகளைப் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தைக் குறைக்கும் வகையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உதகை தலைமை தபால் நிலையம், துணை, கிளை தபால் நிலையங்களில் இருந்து தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு முகக் கவசம், மருந்து, மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
எனவே, பொதுமக்கள் தங்கு தடையின்றி இந்த தபால் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.