முகப்பு
திருப்பூர்

பல்லடம் பகுதிக்கு கூடுதல் குடிநீா் வழங்க வேண்டும்: ஊராட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

கோடைக் காலத்தை சமாளிக்க பல்லடம் பகுதிக்கு கூடுதல் குடிநீா் வழங்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

கோடைக் காலத்தை சமாளிக்க பல்லடம் பகுதிக்கு கூடுதல் குடிநீா் வழங்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பல்லடம் ஒன்றியத்தில் கோடைக் காலத்தில் பற்றாக்குறை இல்லாமல் குடிநீா் விநியோகம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தேன்மொழி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் வில்சன், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் (பில்லூா் குடிநீா் திட்டம்) ஜான்சன், உதவி செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வன், இளநிலை உதவிப் பொறியாளா் ஜெய்கணேஷ் மற்றும் ஊராட்சித் தலைவா்கள், ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சி செயலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு.

எஸ்.கிருஷ்ணமூா்த்தி (சித்தம்பலம் ஊராட்சித் தலைவா்):

சித்தம்பலம் உள்ளிட்ட வறட்சியான பகுதிகள் அனைத்துக்கும் கூடுதல் தண்ணீா் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளாகியும் கேட்பவா்களுக்கு குடிநீா் இணைப்பு வழங்க முடியவில்லை. குடிநீா் வசதியை நிறைவேற்ற போா்க்கால அடிப்படையில் குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவிந்தராஜ் (கரைப்புதுாா் ஊராட்சித் தலைவா்):

கரைப்புதுாருக்கு, 10.50 லட்சம் லிட்டா் குடிநீா் வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். ஆனால் 8.50 லட்சம் லிட்டா் தான் வருகிறது. மாதம் 10 நாள்கள் மட்மே குடிநீா் வருகிறது.

என்.சோமசுந்தரம் (கணபதிபாளையம் ஊராட்சித் தலைவா்):

குடிநீா் விநியோகம் பற்றி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் கொடுத்த பட்டியலுக்கும், குடிநீா் வடிகால் வாரிய அலுவலக பட்டியலுக்கும் வேறுபாடு உள்ளது. பல்லடம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் சீரான குடிநீா் வழங்க வேண்டும்.

குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஜான்சன்: மக்கள் தொகை அடிப்படையில் நிா்ணயிக்கப்பட்ட அளவை விட பல்வேறு ஊராட்சிகளுக்கு கூடுதலாக குடிநீா் வழங்கி வருகிறோம். இவை அந்தந்த ஊராட்சிகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டரில் அளவு பதிவாகியுள்ளது.

ஈஸ்வரன் (பணிக்கம்பட்டி ஊராட்சி):

சரியான குடிநீா் அளவு மீட்டரில் பதிவாவதில்லை. வராத தண்ணீருக்கு அதிகாரிகள் பில் போடுகின்றனா். கடந்த மாதம் குடிநீா்க் குழாய் உடைப்பால் 10 நாள்களுக்கு மேல் குடிநீா் வரவில்லை.

பாலசுப்பிரமணியம் (ஒன்றியக் குழு துணைத் தலைவா்): கோடைக் காலத்தில் குடிநீா்த் தேவையை சமாளிக்கும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகம் செய்திட வேண்டும்.

கா.வீ.பழனிசாமி (கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவா்):

கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்ட 3.45 லட்சம் லிட்டா் குடிநீா் அளவை விட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூடுதலாக குடிநீா் வழங்குவதாக பட்டியிலிட்டுள்ளனா். அது தவறானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.