முகப்பு
தருமபுரி

தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலி

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் பலியாகின.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விளை நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பலியான யானைகள்.
பகிர்:


தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் பலியாகின.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த சில மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சில நேரங்களில் விவசாயிகளை தாக்கியும் வருகின்றன.

இந்தநிலையில், பாலக்கோடு வட்டம் காளிக் கவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அருகாமையில் உள்ள வனத்திலிருந்து திங்கள்கிழமை இரவு வெளியேறிய இரண்டு குட்டி யானைகள் உள்பட 5 யானைகள் இந்த நிலத்துக்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியிலிருந்து யானைகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் 2 பெண் மற்றும் 1 ஆண் என மொத்தம் 3 யானைகள் நிகழ்விடத்திலேயே பலியாகின. நல்வாய்ப்பாக உடன் வந்த இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பின. இருப்பினும் இவ்விரு குட்டி யானைகளும் பெருந்தவிப்புடன் அதே பகுதியில் சுற்றி வருகின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதிக்குச் சென்று குட்டியானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விளைநிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்த பாறைக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன்(50) என்பவரை பாலக்கோடு காவல்துறையினர் கைது செய்தனர். மின்வேலியில் சிக்கி பலியான யானைகளை அடக்கம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →