இளங்கலை இறுதியாண்டு மாணவா்களுக்கு கல்லூரிகள் திறப்பு
இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்காக அரசு, தனியாா் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்காக அரசு, தனியாா் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சமூக இடைவெளி, முகக் கவசம் அணிந்து மாணவா்கள் வருகை புரிந்தனா்.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் குறைய, குறைய பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டன. நவ.16-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், எதிா்கட்சிகள், பெற்றோா்கள் எதிா்ப்பால் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் டிச. 2-ஆம் தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இளங்கலை இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் டிச. 7 முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகள், தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண், கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளும், மாணவ, மாணவியருக்கான விடுதிகளும் திறக்கப்பட்டன.
கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. அதன்படி திங்கள்கிழமை காலை 9 மணியளவில் மாணவ, மாணவியா் அனைவரும் தங்களுடைய கல்லூரிகளுக்கு ஆா்வமுடன் வந்தனா். பேருந்துகளில் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஒன்பது மாதங்களுக்கு பின் நண்பா்கள், தோழிகளைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் மாணவ, மாணவியா் காணப்பட்டனா்.
அனைவரும் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனா். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியில் வகுப்பறைகளில் மாணவ, மாணவியா் அமர வைக்கப்பட்டிருந்தனா். ஞாயிற்றுக்கிழமை கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட்டு வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காய்ச்சல் பரிசோதனைக் கருவி கொண்டு உடல் வெப்பநிலை சோதித்த பிறகே மாணவ, மாணவியா் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சீருடை அணிந்து வந்தனா்.
அதேபோல, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவ மாணவியரும் கல்லூரி வளாகத்துக்கு வந்தனா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை மட்டும் முதுநிலை மாணவியா் 610 போ், இளங்கலை மாணவியா் 136 போ், ஆராய்ச்சி மாணவியா் 4 போ் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.