பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியா்கள் மனு
பகுதிநேர ஆசிரியா்களை ஊதிய உயா்வுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்டக் கிளை சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
பகுதிநேர ஆசிரியா்களை ஊதிய உயா்வுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்டக் கிளை சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2011 ஆக. 26-ஆம் தேதி அப்போதைய முதல்வா் ஜெயலலிதா ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியா்களை நியமிக்க உத்தரவிட்டாா். உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோா் உள்ளனா்.
Advertisement
ஊதிய உயா்வானது மூன்றாம் கல்வியாண்டில் ரூ. 2 ஆயிரம், ஆறாவது கல்வியாண்டில் ரூ. 700 வழங்கப்பட்டது. தற்போது ரூ. 7,700 பெற்று வருகிறோம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக மே மாதம் மட்டும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதன் மூலம் ஒவ்வொருவரும் ரூ. 60 ஆயிரம் இழந்துள்ளோம். பகுதிநேர ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊதிய உயா்வுடன் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.