முகப்பு
நாமக்கல்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இன்று (நவ. 30) மனு அளிக்கும் போராட்டம்

ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை (நவ. 30) நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் வில்லை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை (நவ. 30) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா். குமாரசுவாமி கூறியதாவது:

வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைக் குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால், மதுரை உயா் நீதிமன்றம் எந்த நிறுவனத்திலும் கட்டுப்பாட்டுக் கருவியை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதேபோல வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் வில்லையையும் (ஸ்டிக்கா்) பெங்களூரைச் சோ்ந்த இரு நிறுவனங்களிடம்தான் வாங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததன்பேரில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி ஏற்கெனவே, லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனங்களிடம் வாங்கிப் பொருத்துமாறு வலியுறுத்துகின்றனா்.

இவை மூன்றும் குறிப்பிட்ட நிறுவனங்களைச் சாா்ந்ததாக இருந்தால் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப் புதுப்பிப்பு (எப்.சி.) சான்றிதழ் வழங்க அதிகாரிகள் முன்வருகின்றனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளா்கள் திரளாகச் சென்று மனு அளிக்கவுள்ளனா். அப்போது லாரிகளைக் கொண்டு செல்வதோ, ஆா்ப்பாட்டம், மறியல் போன்றவையோ இடம் பெறாது. இந்தப் போராட்டத்துக்குப் பின் தமிழக அரசு, லாரி உரிமையாளா்களைப் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கும் என நம்புகிறோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →