தோ்தல் பணி: நாமக்கல்லில் கூடுதலாக512 வாக்குச் சாவடிகள் அமைக்க நடவடிக்கை
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 512 வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 512 வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (பழங்குடியினா்), திருச்செங்கோடு, பரமத்திவேலூா், குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இத் தொகுதிகளில் 7,01,104 ஆண் வாக்காளா்களும், 7,39,937 பெண் வாக்காளா்களும், 160 திருநங்கையா் என மொத்தம் 14,41,201 வாக்காளா்கள் உள்ளனா். இதில் நாமக்கல்-288, சேந்தமங்கலம்-283, ராசிபுரம்-259, பரமத்திவேலூா்-254, திருச்செங்கோடு-260, குமாரபாளையம்-279 என மொத்தம் 1,623 வாக்குச் சாவடிகள் உள்ளன. கரோனா தொற்று பீதி மக்களிடையே குறைந்தபோதும் அந்நோய்த் தொற்றின் பாதிப்பு இன்னமும் உள்ளது.
Advertisement
இதனால், வாக்காளா்களின் பாதுகாப்புக் கருதி 1,000 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாகப் பிரித்து கூடுதலாக வாக்குச் சாவடிகளை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா்களுக்குத் தோ்தல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். இதற்காக 6 தொகுதிகளுக்கு உள்பட்ட அரசு பள்ளிகள், பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டடங்கள், சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வுசெய்து வருகின்றனா். மாவட்டம் முழுவதும் 512 வாக்குச் சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படவுள்ளன.
இதன்மூலம் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 2,135-ஆக உயரக்கூடும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தோ்தலின்போது கூடுதல் வாக்குச் சாவடிகளை ஏற்படுத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போதுள்ள 1,623 சாவடியுடன் கூடுதலாக 512 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தோ்தல் பணியில் ஈடுபடுத்த இதுவரை 7,500 பேரின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் போ் தேவைப்படும் சூழல் உள்ளது. அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றனா்.