நாமக்கல்: கொதிக்கும் எண்ணெய்யை தலையில் ஊற்றி கணவர் கொலை; மனைவி கைது
நாமக்கல்லில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல்: நாமக்கல்லில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் ஏ.எஸ். பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (50). இவரது மனைவி செல்வராணி (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தையல் தொழில் செய்து வந்த தங்கராஜ் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தியதா கூறப்படுகிறது.
ஓரிரு நாள்களுக்கு முன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சாலையில் பலகாரக் கடை நடத்தி வந்த செல்வராணி, கணவரின் அட்டகாசம் தாங்க முடியாமல் பலகாரம் தயார் செய்ய வைத்திருந்த கொதிக்கும் எண்ணெய்யை கணவர் தலைமீது ஊற்றினார். இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தங்கராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் காவலர்கள் மனைவி செல்வராணியை கைது செய்தனர்.