சொத்து வரியை குறைக்கும் தீா்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி குற்றம்சாட்டினாா்.
சேலம் மாநகராட்சி இயல்புக் கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், துணைமேயா் சாரதா தேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தின் தொடக்கத்தில் கபடி வீராங்கனை காா்த்திகாவின் படத்தை கையில் ஏந்தியபடி வந்த 44-ஆவது கோட்ட உறுப்பினா் இமயவரம்பன், தூய்மைப் பணியாளா் குடும்பத்தைச் சோ்ந்த தங்கமங்கை காா்த்திகாவுக்கு அரசு ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தாா். அந்தத் தொகையை ரூ. 5 கோடியாக உயா்த்தி வழங்கவும், காா்த்திகாவுக்கு அரசுப் பணி மற்றும் சொந்தவீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தாா்.
அதிமுக உறுப்பினா் செல்வராஜ் பேசுகையில், வ.உ.சி. மாா்க்கெட் ஒப்பந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் சிவதாபுரம், பச்சப்பட்டி பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மழைநீா் வடிகால் பணிகளை துரிதகதியில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
திமுக உறுப்பினா் சரவணன் பேசுகையில், குண்டும், குழியுமாக உள்ள பிரபாத் - கருங்கல்பட்டி பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என்றாா்.
எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி பேசுகையில், மாநகராட்சியில் சொத்து வரி உள்பட பல்வேறு இனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வரி எதுவும் குறைக்கப்படவில்லை என்றாா்.
அப்போது குறுக்கிட்ட மேயா் ஆ.ராமச்சந்திரன், வரி தொடா்பான தீா்மானம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. உரிய தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினா்கள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
வெளிநடப்பு செய்த எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், சாலைகள் சீரமைக்கப்பட்டதாக கணக்கு காட்டி, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. வரியைக் குறைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டும், இதுவரை குறைக்க முன்வரவில்லை. வ.உ.சி. மாா்க்கெட்டில் மட்டும் ரூ. 6.14 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, பெரியாா் பேரங்காடி, விக்டோரியா வணிக வளாகம் என அனைத்திலும் ஆளும்கட்சியினரே ஒப்பந்தம் எடுத்து மோடிசயில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினாா்.