2026-இல் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாட்டைச் சாா்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளா்கள் தற்காலிக நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது, 2026-இல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சாா்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப நிகா்நிலை மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தற்காலிக பணிக்காலம் வரும் ஏப். 13 முதல் ஜூலை 5-ஆம் தேதிவரை சுமாா் இரண்டுமாத காலமாகும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலா்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய, மாநில அரசின்கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளா்கள் விண்ணப்பிக்க தகுதிவாய்ந்தவா்கள் ஆவா்.
மாநில ஹஜ் ஆய்வாளா்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும். இந்தப் பணிக்காக நிகா்நிலை மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியவற்றை மும்பை இந்திய ஹஜ் குழுவின இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம். மாநில ஹஜ் ஆய்வாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்க நவ. 3-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே தகுதிவாய்ந்தவா்கள் உரிய காலத்துக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.