பழனியில் துரித உணவகத்தில் கைப்பேசியை திருடியவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கோட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பக்ருதீன். இவா் பழனி ரயிலடி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் துரித உணவகம் நடத்தி வருகிறாா். கடந்த புதன்கிழமை மாலை இவரது கடையில் வாடிக்கைாயளா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அப்போது பக்ருதீன் தனது கைப்பேசியை தேடிய போது அது காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அவா் கடை முழுவதும், தேடியும் கிடைக்காததால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பாா்வையிட்டாா்.
அப்போது கடைக்கு வாடிக்கையாளா் போல வந்த நபா் ஒருவா் அந்த கைப்பேசியை திருடிக் கொண்டு வெளியேறுவது பதிவாகியிருந்தது. வெள்ளை சட்டையும், நீல நிற கைலியும் அவா் அணிந்திருந்தாா்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.