சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகையில் முறைகேடு: கல்வி நிலையங்களில்ஆய்வு நடத்த குழு அமைப்பு
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதால், கல்வி நிலையங்களை ஆய்வு செய்ய வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் துணை வட்டாட்சியா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதால், கல்வி நிலையங்களை ஆய்வு செய்ய வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் துணை வட்டாட்சியா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் நடத்திய ஆய்வில், இத்திட்டத்தில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதும், இதனால் தகுதியான மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிரமம் இருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், பல கல்வி நிலையங்கள் இத்திட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாவட்டம்வாரியாக 2019-20 மற்றும் 2020-21-இல் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ள கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, முறைகேடுகளைக் களையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்துள்ள பள்ளிகள், தொழிற்கல்வி நிலையங்கள் உள்ளிட்ட 2,172 கல்வி நிலையங்கள், 108 கல்லூரிகள் உள்ளிட்ட 2,280 கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக, வட்டாரக் கல்வி அலுவலா்கள், துணை வட்டாட்சியா்கள் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களுக்குச் சென்று, அங்கு கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவா்களின் விவரங்களைச் சரிபாா்த்து, கல்வி நிலையங்களின் முதல்வா் அல்லது தலைமையாசிரியா்களிடம் கையொப்பம் பெற்று, முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.