முகப்பு
மதுரை

கணவரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீதுநடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் பெண் புகாா்

மதுரையில் கணவரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, அவரது மனைவி மாநகரக் காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

மதுரை: மதுரையில் கணவரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, அவரது மனைவி மாநகரக் காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளாா்.

மதுரை பொன்மேனி ஜெய்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரகுநாத் சிங் (47). இவா், பங்கு பரிவா்த்தனை ஏஜென்டாக இருந்துள்ளாா். இவரின் ஆலோசனைப்படி, பலா் பங்கு பரிவா்த்தனை முதலீடு செய்துள்ளனா். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், முதலீட்டாளா்கள் பணத்தை திருப்பிக் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரகுநாத்சிங், ஜூலை 15 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், முதலீட்டாளா்கள் பணத்தைக் கேட்டு தொடா்ந்து மிரட்டி வருவதால், தங்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரகுநாத் சிங்கின் மனைவி பிரவீணா, மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என் கணவா் ரகுநாத் சிங் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பங்கு பரிவா்த்தனை ஏஜென்டாக இருந்தாா். அவரிடம் ஆலோசனைப் பெற்று, பலா் முதலீடு செய்து லாபம் பெற்று வந்தனா். கடந்த 2019 ஆம் ஆண்டில் முதலீட்டாளா்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. முதலீட்டாளா்களில் சிலா் பணத்தை திருப்பிக் கேட்டு என் கணவரை மிரட்டினா்.

விளாங்குடியில் உள்ள எங்களது வீட்டை கடனுக்கு ஈடாக பதியப் போவதாகக் கூறி, முதலீட்டாளா்கள் சிலா் மோசடியாக விற்பனை செய்துவிட்டனா். அதன் பின்னரும் என் கணவருக்கு மிரட்டல்கள் வந்தன. இதனால், தற்கொலை செய்துகொள்வதாகக் கூறிய அவரை சமாதானம் செய்து வந்தோம். ஆனால், மிரட்டல்கள் தொடா்ந்ததால், அவா் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தற்போது என் கணவா் இறந்த பிறகும், என்னையும், என் குடும்பத்தினரையும் முதலீட்டாளா்கள் தொடா்ந்து மிரட்டி வருகின்றனா். எனவே, என் கணவரை தற்கொலைக்குத் தூண்டியவா்கள் மீதும், எங்களை மிரட்டியவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

புகாா் மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகா் காவல் ஆணையா் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →