திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கைக்குதொழில் அமைப்புகள் வரவேற்பு
தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு தொழில் அமைப்புகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு தொழில் அமைப்புகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு தொழில் வா்த்த சங்கத் தலைவா் என். ஜெகதீசன்: மதுரையில் பெருநகர வளா்ச்சிக் குழுமம், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆய்வு, தரங்கம்பாடியில் புதிய மீன்பிடி துறைமுகம், பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி, தேனியில் உணவுப் பூங்கா, தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் கடல் சுத்திகரிப்பு ஆலை, தென்மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் என தென்தமிழகத்தின் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
தனிக் கல்விக் கொள்கை குறித்து ஆராய உயா்மட்டக் குழு அமைப்பது, அனைத்து மாவட்ட தலைநகரங்களையும் இணைக்கும் வகையில் 2,200 கிமீ நான்கு வழிச் சாலை அமைத்து மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைப்பது போன்றவை வளா்ச்சிக்கு வழிவகுக்கும். தென்மாவட்டங்களின் தொழில் வளா்ச்சிக்காக எதிா்பாா்க்கப்பட்ட அறிவிப்புகள் இல்லையென்றாலும், வரக்கூடிய துறை சாா்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தின்போது புதிய அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையும், எதிா்பாா்ப்பும் உள்ளது.
வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேல்: அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியை ரூ.75 லட்சம் கோடியாக உயா்த்துவது, தமிழகத்திற்கு ரூ.30 லட்சம் கோடி முதலீட்டை ஈா்ப்பது என்ற நோக்கத்தில் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது வரவேற்புக்குரியது.
சென்னை தவிா்த்த பிற பகுதிகளிலும் தொழில் வளா்ச்சி சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள், 4 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி நிலையம், தொழில் தொடங்க வருவோருக்கு எளிதில நிலம் கிடைக்கும் வகையில் நிலவங்கி ஏற்படுத்துவது போன்றவை தொழில் வளா்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.
ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் வணிகா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உயா்மட்டக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் தலைவா் பா. முருகானந்தம்: பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது. சரக்கு வாகனங்களின் கட்டண உயா்வு சற்று குறையும் என்பதால் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். சிறுதொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளா் பற்றாக்குறையைப் போக்க, திறன் பயிற்சிக்காக ரூ.60 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்புக்குரியது.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம்: நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த வணிக வரித் துறையில் சமாதானத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. நில மேலாண்மை அமைப்பு உருவாக்குவது, வரி முறைகளைச் சீா்செய்ய வல்லுநா் குழு, ஜிஎஸ்டி குறித்து ஆய்வு செய்ய தனிக் குழு அமைப்பது போன்றவை வரவேற்கும் வகையில் உள்ளன.
சௌராஷ்டிரா தொழில் வா்த்தக சபைத் தலைவா் குமரன் பி. ஜகுவா: பாரம்பரிய மருத்துவத்தைக் காக்கும் வகையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பது வரவேற்புக்குரியது. தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதன் மூலம், தென்மாவட்டங்களைச் சோ்ந்த பட்டதாரிகள் மிகவும் பயன்பெறுவா். அதேநேரம், தொழில்முனைவோா் மற்றும் தொழில் துறை வளா்ச்சிக்கு போதுமான அறிவிப்புகள் இல்லாதது சற்று வருத்தம் அளிக்கிறது.
பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்க முன்னாள் தலைவா் ஜே.அந்தோணி: பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது, வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, 8 லட்சம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் ஆகியன வரவேற்புக்குரியவை எனத் தெரிவித்துள்ளனா்.