முகப்பு
மதுரை

விலங்குகள் வேட்டையாடப்படுவது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு: வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு கடத்தப்படுவது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

தமிழகத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு கடத்தப்படுவது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த நித்யா செளமியா என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 3,305 கிலோ மீட்டா் தொலைவுக்கு காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், வனவிலங்குகளின் தோல், பல், தந்தம் உள்ளிட்டவற்றுக்காக, அவை தொடா்ச்சியாக வேட்டையாடப்பட்டு கடத்தப்படுகின்றன.

உலகளவில் சட்டவிரோதமாக விலங்குகளின் உடல் பாகங்களுக்காக நடைபெறும் கடத்தல்கள் அதிகமாக நமது நாட்டின் வழியாகவே நடைபெறுகிறது. இதற்கு, நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இல்லாததே காரணம்.

காடுகளில் உள்ள எறும்புத்தின்னிகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. மருத்துவப் பயன்பாட்டுக்காக எறும்புத்தின்னியின் ஓடுகள் அதிகப்படியாக சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.

கடந்த 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை நமது நாட்டில் 3 ஆயிரம் எறும்புத்தின்னிகள் ஓடுகளுக்காகக் கொல்லப்பட்டுள்ளன. இதில், 25 கடத்தல்காரா்களிடமிருந்து 5 ஆயிரம் கிலோ எறும்புத்தின்னிகளின் ஓடுகள் கைப்பற்றப்பட்டன. நிகழாண்டில் ஜனவரி 5 ஆம் தேதி 5.75 கிலோ எடையுள்ள எறும்புத்தின்னிகளின் ஓடுகள், சிறுத்தை நகங்கள் 6, யானைகளின் தந்தங்கள் 4 என வனத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், காடுகளில் உள்ள அரிய வகை மரங்களான சந்தனம், தேக்கு போன்ற மரங்களும் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. காடுகளில் கஞ்சா செடிகள் வளா்த்து கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து மத்திய-மாநில வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →