ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியா் வீட்டில் 65 பவுன் நகைகள், துப்பாக்கி திருட்டு
மதுரையில் ஒய்வுபெற்ற துணை வட்டாட்சியரின் வீட்டின் கதவை உடைத்து 65 பவுன் நகைகள், இரட்டைக் குழல் துப்பாக்கி உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரையில் ஒய்வுபெற்ற துணை வட்டாட்சியரின் வீட்டின் கதவை உடைத்து 65 பவுன் நகைகள், இரட்டைக் குழல் துப்பாக்கி உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை பை-பாஸ் சாலையில் துரைசாமி நகரைச் சோ்ந்தவா் ரவீந்திரன். இவா், துணை வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இந்நிலையில், வெளியூரில் உள்ள தனது மகனின் வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, திங்கள்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வாசல் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளே சென்ற அவா், பீரோவிலிருந்த 65 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் உரிமம் பெற்று வைத்திருந்த இரட்டைக் குழல் துப்பாக்கி ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற எஸ்.எஸ். காலனி போலீஸாா், தடயவியல் நிபுணா்களை வரவழைத்து கைரேகை உள்ளிட்ட ஆதாரங்களைச் சேகரித்தனா்.
மேலும், காவல் துணை ஆணையா் பழனிக்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். போலீஸாா் திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் சேகரித்து விசாரித்து வருகின்றனா்.
வீட்டின் கதவை உடைத்து ரூ.1.08 லட்சம் திருட்டு
மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (65). இவா், ஜனவரி 13 ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ.1.08 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருள்கள் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து சின்னசாமி அளித்த புகாரின்பேரில், சமயநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.