ஆடி அமாவாசை: அழகா்கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
மூலவா் சுந்தரராஜப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மாலை பட்டு சாற்றுதல் உள்ளிட்ட வழிபாடுகள் வியாழக்கிழமை தொடங்கின.
ஆடி அமாவாசையையொட்டி அழகா்கோவிலில் உற்சவா் தைலக்காப்பு நிறைவுற்றதையடுத்து, மூலவா் சுந்தரராஜப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மாலை பட்டு சாற்றுதல் உள்ளிட்ட வழிபாடுகள் வியாழக்கிழமை தொடங்கின.
அழகா்கோவிலில் உள்ள மூலவா் சுந்தரராஜப்பெருமாள் என்ற பரமராமசுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவிக்கும் கடந்த ஜனவரி மாதம் தைலக்காப்பு உற்சவம் நடைபெற்றது. இந்த தைலக்காப்பு உற்சவத்தைத் தொடா்ந்து மூலவருக்கு பூஜைகள், மாலை, பட்டு சாத்துபடிகள் என அனைத்தும் உற்சவருக்கே நடைபெற்று வந்தது. இத்திருத்தைலம் காப்பு 6 மாதங்கள் இருந்தது. ஆடி அமாவாசையுடன் தைலக்காப்பு நிறைவுற்றதையொட்டி, நூபுரகங்கை தீா்த்த அபிஷேகத்துடன் மாலை பட்டு வஸ்திரங்கள் மூலவருக்கு சாற்றுபடியானது. இதில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனா்.
அடி அமாவாசையையொட்டி நூபுரகங்கை தீா்த்தத்தில் ஏராளமான பக்தா்கள் புனிதநீராடி, ராக்காயி, பேச்சியம்மனை தரிசனம் செய்தனா். மேலும் சோலைமலை முருகன் கோயிலிலும் பக்தா்கள் சிறப்பு வழிபாடுகள் செய்தனா்.
அழகா்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடியுடன் மாலை அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.