முகப்பு
மதுரை

அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக் கோரிக்கை

அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக் கோரிக்கை.

Updated On : 5 டிசம்பர், 2024 at 11:03 PM
பகிர்:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதிமுறைகள்படி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என தலித் மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச. கருப்பையா, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 60 நாள்களுக்குள் குற்ற அறிக்கை தயாரிக்கப்பட்டு, சிறப்பு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் முன்னுரிமை அடிப்படையில் இந்த வழக்குகளை விசாரித்து தீா்ப்பளிக்க வேண்டும் என்பது வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதி.

ஆனால், காவல் துறை இந்த விதிமுறைகளைச் சிறிதும் பின்பற்றுவதில்லை. மேலும், பல வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களில் பல ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இதற்கு சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கைக் குறைவும் ஓா் காரணமாக உள்ளது.

தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் 20 மாவட்டங்களில் மட்டுமே இருப்பதாகவும், 18 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் தெரியவருகிறது. இதனால், தமிழகத்தில் 7,234 வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் விரைந்து தீா்வு கண்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும்.

எனவே, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதிமுறைகள்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, அதற்கான நீதிபதிகளையும் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

முதலிடத்தில் மதுரை

தமிழகத்தில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 744 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய பட்டியலின ஆணையத்தின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் 601 வழக்குகளும், மாநகரப் பகுதிகளில் 143 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதற்கடுத்த நிலையில், அதிக எண்ணிக்கையிலான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களின் விவரம்:

திருநெல்வேலி -387, திருவண்ணாமலை - 380, தஞ்சாவூா் - 360, சிவகங்கை- 350, தேனி - 335, புதுக்கோட்டை - 331, விருதுநகா் - 327, தென்காசி - 298, தூத்துக்குடி- 228, கடலூா் - 204.

முழு கட்டுரையைப் படிக்க →