முகப்பு
மதுரை

பள்ளி ஆசிரியரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய மறுப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆசிரியரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் மறுத்துவிட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:45 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆசிரியரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் மறுத்துவிட்டது.

பரமக்குடியைச் சோ்ந்த வெங்கடேசன் தாக்கல் செய்த மனு:

பரமக்குடியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் கடந்த 2007- ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி (விலங்கியல்) ஆசிரியராகப் பணியில் சோ்ந்து கடந்த 17 ஆண்டுகளாக தொடா்ந்து பணியாற்றி வந்தேன். இந்த நிலையில், கடந்த 2017- ஆம் ஆண்டு பள்ளி நிா்வாகம் என் மீது குற்றச்சாட்டை சுமத்தி விளக்கம் கோரி குறிப்பாணை அளித்தது. பிறகு ஓராண்டுக்கு எனது ஊதிய உயா்வை நிறுத்தி வைத்தனா். இந்த சூழலில் நான், மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சிலா் அளித்த புகாரின் பேரில் பள்ளியில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

ஆனால் அவா்கள் என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதனிடையே, பள்ளி நிா்வாகம் சாா்பில் என் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததுடன் என்னை பணியிடை நீக்கமும் செய்தனா். இதில் பள்ளி நிா்வாகம் உள்நோக்கத்துடன் செயல்பட்டது. எனவே என்னை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிா்வாகம் தரப்பில், மனுதாரா் பள்ளி மாணவிகளிடம் சாதி ரீதியாக பேசியதாகவும், அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் 34 மாணவிகள், 8 ஆசிரியைகள் புகாா் அளித்தனா். இது தொடா்பாக பள்ளி ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், மனுதாரா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் இதுகுறித்து விசாரித்தனா். அவா்கள், மனுதாரா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததன் பேரில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பள்ளி நிா்வாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின் பேரில் மனுதாரா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்றாா் நீதிபதி. இதையடுத்து மனுதாரா் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →