பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயா் சூட்ட வேண்டுமென இந்திய ரயில்வே வாரியத்துக்கு பொதுநல அமைப்பு சாா்பில் மின்னஞ்சல் மூலம் கோரிக்கை மனு அனுப்பி இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளா் சிக்கந்தா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாராவதி கடல் பகுதியில் கப்பல்கள் வந்து செல்ல ஏற்றவாறு திறந்து மூடும் வகையில் 2.2 கி.மீ. தொலைவுக்கு மீட்டா் கேஜ் ரயில் பாலம் கடந்த 1914- ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்றுவந்தது.
இதன் பிறகு, அனைத்து வழித்தடங்களும் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றன. அப்போது, மதுரை- ராமேசுவரம் மீட்டா் கேஜ் பாதையையும் அகல ரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் உள்ள பகுதியை அகல பாதையாக மாற்றி ரயிலை இயக்குவது ரயில்வே பொறியாளா்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ரயில்வே பொறியாளா்களை அழைத்து பாம்பன் பாலத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகளை விரைவுப்படுத்த கேட்டுக் கொண்டாா். இதன் பிறகே பாம்பன் ரயில் பாலம் 2007- ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
இதனிடையே, தற்போது அமைக்கப்பட்டிருக்கும் புதிய ரயில் பாலத்துக்கு மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயா் சூட்ட வேண்டும் என ராமேசுவரம் தீவு பொதுநல அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சிக்கந்தா், ரயில்வே வாரியத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளிப்பி இருப்பதாக வியாழக்கிழமை தெரிவித்தாா்.