ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு அதிமுக மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் பாரத ரத்னா விருது வடிவிலான ஸ்படிக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முத்துராமலிங்கத் தேவரின் சமூக சேவை, மக்கள் பணி ஆகியவற்றை கெளரவிக்கும் வகையில், அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் அண்மையில் நேரில் கோரிக்கை மனு அளித்திருந்தாா்.
இந்த நிலையில், ராமநாதபுரம் அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி, விருதுநகா் மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் எ.சரவணன், தெற்கு ஒன்றியச் செயலா் எஸ்.பி.காளிமுத்து, கே.கருமலையான் ஆகியோா் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு பாரத ரத்னா விருது வடிவிலான ஸ்படிக மாலையை வெள்ளிக்கிழமை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக விவசாய அணி மாநிலத் துணைச் செயலா் சண்முக பாண்டியன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலத் துணைச் செயலா் அரவிந்த், செயலா் செ.நாகராஜன் ராஜா, கமுதி மேற்கு ஒன்றிய அவைத் தலைவா் டி.சேகரன், எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் வழிவிட்டான், அம்மா பேரவை இணைச் செயலா் வேந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.