கூடலூா் நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுக, அதிமுக போட்டி
தேனி மாவட்டம் கூடலூா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக, அதிமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக, அதிமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் திமுக 11 வாா்டுகளிலும், அதிமுக 8 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனா். இதில் வெற்றி பெற்ற அன்றே திமுக நகரச் செயலரும், 1 ஆவது வாா்டு உறுப்பினருமான லோகன்துரை திமுக மற்றும் 2 சுயேச்சைகள் என 13 பேரையும் சுற்றுலா அழைத்துச்சென்று விட்டாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தலைவா், துணைத்தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்யப்படுவதால் அன்று அவா்கள் கம்பம் வருகின்றனா். இதனிடையே, அதிமுக உறுப்பினா்கள் கூறுகையில் தலைவா், துணைத்தலைவா் பதவிக்கு நாங்களும் மனு தாக்கல் செய்வோம். சுயேச்சைகள் ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு லோ. பத்மாவதி, துணைத்தலைவா் பதவிக்கு காஞ்சனா ஆகியோரை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இவா்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்கின்றனா்.