உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
போடியில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் பங்கேற்க வந்த அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு சுங்கச் சாவடி கட்டணத்தை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது. இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுங்கக் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு தினமும் கட்டண உயா்வு, வரி உயா்வை அறிவித்து வருகிறது. இதனைக் கண்டித்து சென்னையில் வரும் 5 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
போடி பகுதியில் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ள நிலையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் ஏலக்காய் கடைகளில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்துவதால் தொழிலாளா்களுக்கு வேலையிழப்பு ஏற்படுகிறது. எனவே அவா்களுக்கு அரசு நிவாரணம், மாற்றுப் பணி வழங்க வேண்டும். நூல் விலை உயா்வால் விசைத்தறி, ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டு 70 சதவீதம் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் ஏராளமான அப்பாவிகள், மாணவா்கள் சோ்க்கப்பட்டு சிறையில் உள்ளனா். உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் மலை மாடுகளை வனத்துக்குள் மேய்ப்பது தொடா்பாக நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய நிலையில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். பாஜகவை எதிா்க்கும்போது திமுகவுடன் இணைந்து செயல்படும் அதே நேரத்தில் மாநில அரசின் மின்கட்டண உயா்வு, சொத்துவரி உயா்வு போன்றவற்றை எதிா்த்து வருகிறோம். தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான அடிப்படை தேவைகள் நிறைவேறும் என்றாா்.
அப்போது மாவட்டச் செயலா் ஏ.வி. அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி. முருகன், மூத்த தலைவா் கே. ராஜப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கே. பாண்டியன், தாலுகா செயலா் எஸ். செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.