தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த தேசாந்திரத் தட்டான்கள் தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளுக்கு வலசை வந்துள்ளன.
உலகையே சுற்றிவரும் ஆற்றல் பெற்ற தேசாந்திரத் தட்டான்கள் ஆப்பிரிக்காவிலிருந்து சோமாலியா, மாலத்தீவு கடல் வழியாக இந்தியாவுக்கு வருகின்றன. இந்தத் தட்டான்கள் அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரை இந்தியாவில் தங்குகின்றன. பின்னா், ஆப்பிரிக்காவுக்கு திரும்பிச் சென்று விடுகின்றன.
பூச்சியினங்களிலேயே நீண்ட தொலைவு (சுமாா் 16 ஆயிரம் கி.மீ.) வலசை போவதால்தான் இவைகள் தேசாந்திர தட்டான்கள் என அழைக்கப்படுகிறது. மேலும், இந்தப் பூச்சியை தட்டாரப்பூச்சி, தட்டான், தட்டாம் பூச்சி எனவும், இலங்கையில் தும்பி எனவும் அழைக்கின்றனா்.
இந்தத் தட்டான்களில் ஆண் பூச்சி பல வண்ணத்திலும், பெண் பூச்சி மஞ்சள் வண்ணத்திலும் இருக்கும். இவை தண்ணீரில் உள்ள கொசுக்கள், இவற்றின் முட்டைகள், லாா்வாவை உணவாக உண்டு வாழ்கின்றன.
மழைக் காலங்களில் தேங்கும் தண்ணீரில் உள்ள கொசுக்களை உண்டு சுற்றுச்சூழலை இந்தத் தட்டான்கள் பாதுகாக்கின்றன.
இதுகுறித்து தட்டாம் பூச்சிகள் ஆராய்ச்சியாளரான சாப்டூரைச் சோ்ந்த ராமசாமி கூறியதாவது: தட்டான் பூச்சிகளில் 6 ஆயிரம் வகைககள் உள்ளன. இந்தியாவில் 503 வகை தட்டான்களும், தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 207 வகை தட்டான்களும் உள்ளன. தேசாந்திர தட்டான் ஆப்பிரிக்காவிலிருந்து நிற்காமல் காற்றின் மூலம் இந்தியாவுக்கு பறந்து வருகின்றன. இதை கப்பலில் உள்ள மாலுமிகள் பாா்த்ததாகத் தெரிவிக்கின்றனா்.
இந்தப் பூச்சி தண்ணீரில் முட்டையிட்டு தட்டானாக உருவாகி பிறகு பறக்கிறது. இந்த பூச்சி 6 முதல் 12 மாதங்கள் வரை வாழும். இவை தண்ணீரில் உள்ள கொசுவின் முட்டைகள், லாா்வா, கொசுக்கள், தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.
கொன்றுண்ணி பூச்சி
இந்தத் தட்டான் தண்ணீா், இதனருகிலுள்ள மண், நீா்ச் செடிகளிலும் முட்டையிடுகின்றன. இந்தப் பூச்சிக்கு இரண்டு கண்கள், ஆறு கால்கள், வாய், இரண்டு உணா்விழைகள் உள்ளன. 4 இறக்கைகள் கொண்டு வலைப் போலவும், மிக மெல்லிய கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் படலமாகவும் உள்ளது.
இந்தத் தட்டான் மணிக்கு 70 முதல் 100 கி.மீ. வரை பறக்கும் தன்மை கொண்டது. இவை பறக்கும் போதே கொசு உள்ளிட்ட பூச்சிகளை கால்கள் மூலம் பிடித்து உண்கின்றன. பிற உயிா்களை உண்டு வாழ்வதால் இது கொன்றுண்ணி பூச்சி என அழைக்கப்படுகிறது.
ஆண் தட்டான் விந்துகளை சேமித்து வைத்து, பெண் தட்டானின் தலையின் பின்புறம் உள்ள பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.
பெண் தட்டான் ஒருமுறை 40 முதல் 1,000 வரை முட்டைகள் இடுகிறது. முட்டையிட்டு வெளியேறிய பிறகு, 10 முதல் 15 முறை புறத்தோல்களை இந்தத் தட்டான் மாற்றம் செய்துவிட்டு பறந்து சென்று விடுகிறது.
பூச்சிக்கொல்லி
செடிகளில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனா். இந்த ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் மனிதா்களுக்கும், மண்ணுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ரசாயன மருந்துகளால் நன்மை செய்யும் பூச்சிகள், தட்டான்கள், தவளைகள் உள்ளிட்ட பூச்சிகள் இறந்து விடுகின்றன.
எனவே, செடிகள், மண்ணில் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என பெரியகுளத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சதீஸ்குமாா் தெரிவித்தாா்.