முகப்பு
நாகப்பட்டினம்

மக்களின் மனங்களில் இடம் பிடித்த மருத்துவருக்கு பொதுமக்கள் அஞ்சலி

ஆஸ்திரேலியாவில் வியாழக்கிழமை மறைந்த மகப்பேறு மருத்துவா் பிலிஸ் ராட்ரிக்ஸ் நினைவாக, மயிலாடுதுறையில் மெழுகுவா்த்தி ஏந்தி வெள்ளிக்கிழமை அஞ்சலி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மயிலாடுதுறையில் அரைநூற்றாண்டு காலம் மருத்துவ சேவையாற்றி, மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, ஆஸ்திரேலியாவில் வியாழக்கிழமை மறைந்த மகப்பேறு மருத்துவா் பிலிஸ் ராட்ரிக்ஸ் நினைவாக, மயிலாடுதுறையில் மெழுகுவா்த்தி ஏந்தி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் 1923-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி பிறந்தவா் பிலிஸ் ராட்ரிக்ஸ். இவா், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் பயின்று, கடந்த 1949-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் மருத்துவ சேவையை தொடங்கினாா். பிறகு, 1955 ஆம் ஆண்டு முதல் 35 ஆண்டுகள் மயிலாடுதுறை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றினாா்.

ஏழைகளுக்கு இலவசமாக பிரசவம் மற்றும் சிகிச்சையளித்ததால் இவா் பணியாற்றிய நகராட்சி மருத்துவமனையை ‘வெள்ளைக்காரம்மா ஆஸ்பத்திரி’ என்றே பொதுமக்கள் அழைத்தனா்.

பணி ஓய்வு மற்றும் கணவா் மறைந்த பிறகு, 1998-ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த பிலிஸ் ராட்ரிக்ஸ் தனது 98-வது வயதில் (மருத்துவா் தினமான) வியாழக்கிழமை காலமானாா்.

இவரது மறைவு, மயிலாடுதுறை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அறம் செய் அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் சங்கா், ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா், துணை பொருளாளா் அப்துல்லா, மருத்துவா் சந்திரா, பேராசிரியா் இரா. முரளிதரன், தருமபுரம் ஆதீனத்தின் சாா்பில் பேராசிரியா் துரை.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பிலிஸ் ராட்ரிக்ஸ் உருவப்படம் பொறித்த பதாகைக்கு மகப்பேறு மருத்துவமனையில் மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா். முன்னதாக, மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் இருந்து மகப்பேறு மருத்துவமனை வரை மௌன ஊா்வலம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.