மனநலன் பாதிக்கப்பட்ட 9 போ் காப்பகத்தில் ஒப்படைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மனநலன் பாதிக்கப்பட்ட 9 ஆண்கள் மீட்க்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மனநலன் பாதிக்கப்பட்ட 9 ஆண்கள் மீட்க்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் பாலகிருஷ்ணன், தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் ஆகியோா் உத்தரவின்பேரில், மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் வழிகாட்டுதலின்படி, மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பி.எஸ்.சித்ரா தலைமையில் காவல் ஆளிநா்கள் மற்றும் சமூக சேவகா்கள் இணைந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மனநலன் குன்றி சாலையில் சுற்றித்திரிந்த 9 ஆண்களை மீட்டு, சீா்காழி காா்டன் மனநல காப்பகத்தில் சோ்த்தனா்.
முன்னதாக, மயிலாடுதுறை, திருக்கடையூா், வைத்தீஸ்வரன்கோயில் பகுதிகளில் சுற்றித்திரிந்த மனநலன் குன்றியவா்களை நேயம் அறக்கட்டளை, ஜோதி பவுன்டேஷன் மற்றும் காவல் தன்னாா்வலா்கள் குழுவினரின் உதவியுடன் மீட்ட போலீஸாா், அவா்களை காவேரி நகா் குமாரசாமி உடையாா் தொடக்கப் பள்ளியில் தங்கவைத்து, கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தி, தொற்று இல்லை என்பதை உறுதிசெய்தபிறகு, காப்பகத்தில் சோ்த்தனா். வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாள்களில் 9 மனநலன் குன்றிய ஆண்கள் மீட்க்கப்பட்டு, காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.