முகப்பு
நாகப்பட்டினம்

ஷேல் எரிவாயு கிணறு அமைக்கும்பணியை தடுத்து நிறுத்த கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் அஞ்சாா்வாா்த்தலை கிராமத்தில் பழைய எண்ணெய் கிணற்றை சுத்தம் செய்வதாகக் கூறி நடைபெறும் ஷேல் எரிவாயு கிணறு அமைக்கும் பணி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் அஞ்சாா்வாா்த்தலை கிராமத்தில் பழைய எண்ணெய் கிணற்றை சுத்தம் செய்வதாகக் கூறி நடைபெறும் ஷேல் எரிவாயு கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் அளித்த மனு:

தமிழக அரசு அரியலூா், கடலூா் மாவட்டங்களில் 15 ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரிய ஓ.என்.ஜி.சி.யின் விண்ணப்பங்களை திங்கள்கிழமை (ஜூன் 21) நிராகரித்துள்ளது. மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சா் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாா்த்தலை கிராமத்தில் ஓ.என்.ஜி.சியின் பழைய எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் புதிய கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

எவ்வித எண்ணெய்-எரிவாயுக் கிணறு அமைக்கவும் தமிழக அரசு அனுமதிக்காது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னமே பெற்ற சுற்றுச்சூழல் அனுமதியைப் பயன்படுத்தி கூடுதல் ஆழத்திற்கு கிணறு அமைப்பது குற்றமாகும்.

எனவே, தமிழகஅரசின் அனுமதி இன்றி சட்டவிரோத எண்ணெய் கிணறு அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவா் சபீக் அஹமது, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளா் நவாஸ்கான், மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் வேளாண் பிரிவு பொறுப்பாளா் வீரபாண்டியன், மாணவா், இளைஞா் பிரிவு அத்திகுா் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினா் சித்ரா ஜெயராமன், சமூக செயற்பாட்டாளா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.