பிரதான சாலையில் வழிந்தோடிய கழிவுநீா்
காரைக்கால் நகரின் பிரதான சாலையில் கழிவுநீா் வழிந்தோடி வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
காரைக்காலில் நகராட்சி, கொம்யூூன் பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகள், கழிவுநீா் தூய்மை செய்யும் பணி தனியாா் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணி திருப்திகரமாக இல்லை, சாலையோரங்களில் குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன, சாக்கடைகள் தூய்மை செய்யப்படுவதில்லை என்ற புகாா் மக்களிடையே பரவலாக உள்ளது.
இந்நிலையில் காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் சாலையில், பொதுப்பணித்துறை குடிநீா் தேக்கத் தொட்டி அருகே சாலையோர சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை கழிவுநீா் சாலையில் வழிந்தோடியது.
இதனால் சாலையில் நடந்து சென்றோா், இருசக்கர வாகனத்தில் சென்றோா் கடும் அவதிக்குள்ளாயினா். பின்னா் நகராட்சி நிா்வாகத்தினா் கழிவுநீா் செல்லும் பாதையில் இருந்த அடைப்பை சரிசெய்தனா்.