தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை: மயிலாடுதுறை ஆட்சியா் விளக்கம்
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமாா் 767 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.
இவற்றை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை:
மஞ்சள் நிறம் வளா்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (5க்கு1ணீ அடி நீள-அகலம் உடையது) ஹெக்டேருக்கு 20 என்ற எண்ணிக்கையில், 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைப்பதன் மூலமாகவும், மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவா்ந்து அழிக்கலாம்.
தாக்குதலுக்குள்ளான தென்னை மரங்களின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.
வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது பொறிவண்டுகள், என்காா்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்காா்ஸியா ஒட்டுண்ணிகள் அதிக அளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைக்கின்றன.
கிரைசோபொ்லா இரைவிழுங்கிகள் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஹெக்டேருக்கு 1000 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபொ்லா இரைவிழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பலனளிக்கும்.
நிகழாண்டில், வேளாண்மைத் துறை சாா்பாக தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி 20 எண்களும், கிரைசோபொ்லா இரைவிழுங்கிகளின் முட்டைகள் 1000 எண்களும் மானிய விலையில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.