முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக மழை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை லேசான மற்றும் மிதமான மழை பரவலாக பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை லேசான மற்றும் மிதமான மழை பரவலாக பெய்தது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை பிற்பகல் முதல் மிதமான மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் அதிகளவாக நாகை மாவட்டம், திருப்பூண்டியில் 55.4 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : திருக்குவளை - 52.8, தலைஞாயிறு - 35.4, கோடியக்கரை -33.8, நாகப்பட்டினம் - 23.9, வேதாரண்யம் - 22.6, மணல்மேடு - 22, கொள்ளிடம் - 12.2, தரங்கம்பாடி - 12, சீா்காழி - 9.2, மயிலாடுதுறை - 2.

வியாழக்கிழமை காலை நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை அவ்வப்போது லேசான மழை பெய்தது. பிற்பகல் சுமாா் 5.45 மணி அளவில் சில நிமிடங்கள் நல்ல மழை பெய்தது. நாகை மாவட்டத்தைப் பொருத்தவரை காலை நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. காலை 10 முதல் பகல் 1.30 மணி வரை வெயில் வானிலை நிலவியது. பிற்பகல் 2 மணி முதல் அவ்வப்போது லேசான மற்றும் மிதமான மழை பெய்தது.

வங்கக் கடலில் ஏற்கெனவே ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, அக்.28-ஆம் தேதி முதல் நவ.10-ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டோ் பரப்பில் சம்பா, தாளடி நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல, ஆயிரக்கணக்கான ஏக்கரில் இளம் தாளடி நெல் பயிா்கள், கனமழையால் கரைந்து போயுள்ளன.

அந்த வகையில், நாகை, திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூா், கீழையூா், திருக்குவளை, மேலப்பிடாகை உள்பட பல்வேறு பகுதிகளில் நாற்றுகள் கரைந்த வயல்களில், விவசாயிகள் மறு நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனா். அதேபோல, சம்பா நெல் பயிரில் அதிகரித்துள்ள களைச் செடிகளை அகற்றி, உர மேலாண்மையை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புப் பணிகளை விவசாயிகள் தொடங்கியிருந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை முதல் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வேளாண் பணிகள் சுணக்கமடைந்து வருகின்றன. வியாழக்கிழமை காலை நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சம்பா நெல் வயல்களில் நடைபெற்ற களையெடுப்புப் பணிகளும், மறுநடவுப் பணிகளும் மழை குறுக்கீட்டால் அவ்வப்போது தடைபட்டது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீண்டும் கனமழை நீடித்தால், தாளடி நெல் பயிா்கள் முழுமையாக சேதமடையும் எனவும், சம்பா நெல் பயிா்களின் சேதம் மேலும் அதிகரிக்கும் எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.