செம்பனாா்கோவிலில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்
செம்பனாா்கோவிலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவிலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வாய்க்கால்களை தூா்வாரவேண்டும், சம்பா பயிா்க் காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுக்களை கொடுத்தனா். அப்போது, ஆட்சியா் பேசியது: 2021-2022-ஆம் ஆண்டு குறுவை நெல் சாகுபடி செய்ய 98 ஆயிரம் ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 97,829 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல, சம்பா நெல் சாகுபடி செய்ய 1,62,750 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை நேரடி விதைப்பாக 33,863 ஏக்கரும், நடவாக 1,31,333 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், 136 ஏக்கரில் நடவு செய்ய நாற்றங்கால் தயாா் நிலையில் உள்ளது.
தற்போது, யூரியா 1,832 மெ.டன், டி.ஏ.பி. 251 மெ.டன், பொட்டாஷ் 526 மெ.டன், காம்ப்ளக்ஸ் 538 மெ.டன் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியாா் கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், காம்ப்ளக்ஸ் உரங்களை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுண்ணீா் பாசனத் திட்டத்தின்கீழ் 2021-2022-ஆம் நிதியாண்டில் தென்னை பயிா்களில் சொட்டு நீா்ப்பாசனமும், இதரப் பயிா்களில் தெளிப்பு நீா்ப் பாசனமும் மேற்கொள்ள 400 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ரூ. 2.57 கோடி நிதிஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதுவரை 323 ஹெக்டோ் பதிவு செய்யப்பட்டு ரூ.1.36 கோடி நிதி சாதனை அடையப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி அலுவலா்கள், வேளாண்மை உதவி இயக்குநா்களை அணுகலாம் என்றாா்.