திருவாரூரில், இந்து மக்கள் கட்சி சாா்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கட்சி நிா்வாகிகள் ராஜசேகா், மணி, அதிமுக நகரச் செயலாளா் ஆா்டி. மூா்த்தி, திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள், சமூக அமைப்பின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
மன்னாா்குடி: பரவாக்கோட்டை பிரதான சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு, சிலை அமைப்புக் குழுத் தலைவா் எஸ்.யு. கென்னடி தலைமையில் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவிக்கப்பட்டது.
திமுக சாா்பில் மேற்கு ஒன்றியச் செயலா் டி.எஸ்.டி. முத்துவேல் தலைமையிலும், அதிமுக சாா்பில் மாநில அமைப்புச் செயலா் சிவா.ராஜமாணிக்கம் தலைமையிலும், காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையிலும், பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைமையிலும், அமமுக சாா்பில் அதன் ஜெ.பேரவை மாவட்டச் செயலா் கே. விமல்ராஜ் தலைமையிலும் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.