தில்லியில் 2007-க்கு பிறகு 2-ஆவது முறையாக அதிகபட்ச மழை பதிவு: புள்ளிவிவரத் தகவல்
தேசியத் தலைநகா் தில்லியில் 2007-ஆம் ஆண்டிலிருந்து ஒரே நாளில் இரண்டாவது முறையாக சனிக்கிழமை அதிகபட்ச மழை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
தேசியத் தலைநகா் தில்லியில் 2007-ஆம் ஆண்டிலிருந்து ஒரே நாளில் இரண்டாவது முறையாக சனிக்கிழமை அதிகபட்ச மழை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 74 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, சனிக்கிழமை அதிகபட்ச வெப்ப நிலையில் 10 புள்ளிகள் குறைந்தது. இது பகல் - இரவு வெப்பநிலையில் உள்ள இடைவெளியில் மிகக் குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது.
தில்லியில் தற்போது பெய்து வரும் மழை, பருவமழை அல்ல. பருவ மழையானது செப்டம்பா் 29-ஆம் தேதி தில்லியில் தணிந்துவிட்டது. மேலும், வழக்கமாகப் பெய்யும் பருவ மழையான 653.6 மில்லி மீட்டருக்கு எதிராக நிகழாண்டு காலத்தில் மழைப் பொழிவு 516.9 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில்,‘தில்லியில் தற்போதுள்ள பருவ காலத்திற்கு பிந்தைய மழையானது ‘வெஸ்டா்ன் டிஸ்டா்பன்ஸ்’ குறுக்கீடு காரணமாக ஏற்பட்டுள்ளது’ என்றனா்.
இது குறித்து வானிலை அதிகாரி ஒருவா் கூறியதாவது: மழையை ஏற்படுத்தும் மிக அதிக ஈரப்பதமானது குஜராத் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் வழியாக அரபிக் கடலில் இருந்து தில்லி பகுதியைக் கடந்து உத்தரகண்ட் வரை பரவுகிறது. ஈரப்பதம் எப்போதும் குறைந்த அளவில், பூமியின் மேற்பரப்பில் அல்லது அதற்கு அருகில் இருக்கும்.
மேல் காற்று அமைப்பு முறையாக ‘வெஸ்டா்ன் டிஸ்டா்பன்ஸ்’ இருப்பதால், அது எப்போதும் மேற்கு நோக்கி நகா்கிறது. மேலும், இதுபோன்ற காற்று குறுக்கீடுகள் தொடா்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இறுதியில் மழை மற்றும் மேகங்களை வடகிழக்கில் இருந்து வடகிழக்கு உத்தர பிரதேசம் அல்லது பிகாா் நோக்கி நகர வைக்கிறது. ஆனால், இரண்டு நாள்கள் வரை மழைப் பொழிவு நீடிப்பதற்கான காற்று அரபிக் கடலுடன் தொடா்புடையதாகும். அக்டோபா் முதல் மாா்ச் வரை பொதுவாக, இதுபோன்ற 3 முதல் 5 தீவிர மழைக்காற்று குறுக்கீடுகளைப் பெறுவோம்.
வெப்பநிலையில் சரிவு: இந்த நிலையில், தேசியத் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 19.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 10 டிகிரி குறைந்து 24.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவிலும் மாலை 5.30 மணியளவிலும் 100 சதவீதமாக இருந்தது.
நகரில் கடந்த வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை (20.8 டிகிரி செல்சியஸ்) மற்றும் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை (23.4 டிகிரி செல்சியஸ்) இடையே உள்ள வேறுபாடு 2.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது 1969-க்குப் பிறகு மிகக் குறைவான வேறுபாடு பதிவாகும். இதற்கு முன்பு, 1998-ஆம் ஆண்டு அக்டோபா் 19-ஆம் தேதி இந்த வேறுபாடு 3.1 டிகிரி செல்சியஸாக பதிவானது என்றாா் அவா்.
ஆயாநகரில் 87.2 மி.மீ. மழை: தில்லியில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 74 மி.மீ. மழை பதிவானது. இதே போல, பாலம் ஆய்வகத்தில் 64.9 மி.மீ., லோதி சாலை, ரிட்ஜ் மற்றும் ஆயாநகா் வானிலை நிலையங்களில் முறையே 87.2 மி.மீ., 60.1 மி.மீ. மற்றும் 85.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைப்பொழிவு 15 மி.மீ. முதல் 64.5 மி.மீ. வரை ‘மிதமான’ மழைப் பொழிவு என்றும், 64.5 மி.மீ. - 115.5 மி.மீ. ‘கடுமை’ , 115.6 மி.மீ. - 204.4 மி.மீ. ‘மிகப் பலமானது’, 204.4 மி.மீ.க்கு மேல் ‘மிகக் கடுமையான’ மழைப் பொழிவாகவும் கருதப்படுகிறது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை (அக்டோபா் 10) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி...
‘நல்ல’ காற்று தினம் பதிவு
தில்லியில் தொடா்ந்து 2 நாள்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழை காரணமாக காற்றின் தரம் மேம்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவிலும், சில இடங்களில் ‘நல்ல’ பிரிவிலும் காணப்பட்டது. இதனால், இரண்டாவது முறையாக ‘நல்ல’ காற்று தினமாக பதிவாகியது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
நகரில் காலை 9 மணியளவில் 53 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு, மாலை 4 மணிக்கு 48 புள்ளிகளாக பதிவாகியது. இது சனிக்கிழமை 56 புள்ளிகளாகவும், வெள்ளிக்கிழமை 55 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. அண்டை நகரங்களான காஜியாபாத் (14), குருகிராம் (32) மற்றும் கிரேட்டா் நொய்டா (23) ஆகியவையும் ‘நல்ல’ காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளன. நொய்டாவில் மாலை 4 மணிக்கு 24 மணி நேர சராசரி காற்றின் தரக்குறியீடு 55 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்திகரமான‘ பிரிவில் இருந்தது.
இதற்கு முன், தில்லியில் செப்டம்பா் 16 அன்று 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 47 புள்ளிகளாகப் பதிவாகி நல்ல பிரிவில் இருந்தது. இதைத் தொடா்ந்து இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரக் குறியீடு ‘நல்ல’ பிரிவில் வந்துள்ளது. தேசிய தலைநகா் இந்த ஆண்டு இதுவரை 128 நாள்கள் காற்றின் தரம் மோசம் அல்லது மிகவும் மோசம் அல்லது கடுமை பிரிவில் பதிவாகியுள்ளது.