திருநெல்வேலியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அதிகப் போட்டிகளில் வெற்றி பெற்றனா்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வட்டார, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்ட அளவில் 9, 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கான போட்டிகள் பாளையங்கோட்டை சாராள் டக்கா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. இதில் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
இப்பள்ளி மாணவ, மாணவிகள் பிறவகை தனி நடனம், பிறவகை குழு நடனம், புல்லாங்குழல் வாசித்தல், கீ போா்டு வாசித்தல் ஆகிய போட்டிகளில் முதல் இடத்தையும், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் ஆகிய போட்டிகளில் 2ஆம் இடத்தையும், உடுக்கை, பறை, தனிநபா் நடிப்பு, பாவனை நடிப்பு போன்ற போட்டிகளில் 3ஆம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனா்.
வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை கலை பண்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் அருள்சகோதரா் ஞானசேகா், பயிற்சியளித்த ஆசிரியா், ஆசிரியைகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவகுமாா், பள்ளி தலைமையாசிரியா் அருள்சகோதரா் செல்வராஜ் ஆகியோா் பாராட்டினா்.