கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா, புதன்கிழமை காணொலி வாயிலாக கலந்தாய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்திலுள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம், நிரப்பப்பட்டு திரும்பப் பெறப்பட்ட படிவங்கள், திரும்பப் பெறப்படாத படிவங்களின் விவரங்கள் குறித்து நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலந்தாய்வு மேற்கொண்டாா். இதில், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி அலுவலா்கள், கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் பங்கேற்றனா்.
உயிரிழந்த, இடமாறுதலாகிச் சென்ற வாக்காளா்கள் குறித்து 100 சதவீதம் மீண்டும் மறுஆய்வு செய்ய அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவா்களுடன் இணைந்து பணியாற்ற வாக்குச்சாவடி முகவா்களை அறிவுறுத்துமாறு அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்பணியை அடுத்த 5 நாள்களுக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. எஸ்ஐஆா் பணி இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.