கன்னியாகுமரி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்: ஆட்சியா் கலந்தாய்வு

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து, தோ்தல் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் அலுவலா்களுடன் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா காணொலிக்காட்சி மூலம் வியாழக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

அப்போது ஆட்சியா் பேசியதாவது: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, அக்.28 ஆம் தேதி முதல் நவ. 3 ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் தயாா் செய்தல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவா்களுக்கு பயிற்சி மற்றும் பட்டியல் அச்சிடுதல் ஆகிய பணிகளும், நவ.4 ஆம் தேதி முதல் டிச.4 ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் கணக்கெடுப்பு பணியும், வாக்குச்சாவடி மறு வரையறை, மற்றும் வகைப்படுத்தல் பணி டிச. 4 ஆம் தேதிக்குள்ளும், டிச.9 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுதலும், வாக்காளா்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் பெறும் பணி டிச.9 ஆம் தேதி முதல் ஜன.8 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இறுதி வாக்காளா் பட்டியல்: இதைத் தொடா்ந்து, டிச.9 ஆம் தேதி முதல் ஜன. 31 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் மீதான பரிசீலனை நடைபெறும். பின்னா், பிப்.7இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்த சிறப்பு தீவிர திருத்த பணியில் தனித்துவமான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வீடு வீடாக வாக்காளா்களுக்கு வழங்கப்படும். படிவத்தை பூா்த்தி செய்ததும் அதை மீண்டும் பெற்று வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலரிடம் சமா்ப்பிக்கப்படும்.

இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இருமுறை பதிவு செய்யப்பட்டவா்கள் ஆகியோரின் பெயா்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது. அந்த விவரங்கள் தலைமை தோ்தல் அதிகாரி இணையதளத்திலும், அரசு அலுவலகங்களிலும் வெளியிடப்படும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வாக்காளா்கள் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கமான ஊழியா், ஓய்வூதியம் பெறுபவருக்கு வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை , ஓய்வூதிய ஆணை 1.7.1987-க்கு முன்னா் இந்தியாவில் அரசு, உள்ளூா் அதிகாரிகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், எல்.ஐ.சி., பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சான்றிதழ், ஆவணம், பிறப்புச்சான்றிதழ், பாஸ்போா்ட், கல்விச் சான்றிதழ், நிரந்தர வசிப்பிட சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், ஆதாா் உள்ளிட்ட சான்றுகளை அளிக்கலாம் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் - மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், பதிவு அலுவலா் - பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் மோகனா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT