தொழிற்சங்க நிா்வாகி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முயற்சி: போலீஸாா் சமரசம்
சொத்துப் பிரச்னை தொடா்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஸ்ரீவிஸ்வகா்மா பொதுத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் குடும்பத்துடன் சனிக்கிழமை உண்ணாவிரதம்
சொத்துப் பிரச்னை தொடா்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஸ்ரீவிஸ்வகா்மா பொதுத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் குடும்பத்துடன் சனிக்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்றதையடுத்து, அவரை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
சாத்தான்குளத்தைச் சேரந்தவா் மூக்காண்டி (62). இவா் ஸ்ரீவிஸ்வகா்மா பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவராக இருந்து வருகிறாா். இவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே நிலம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாம். இருப்பினும் அந்த நிலத்தை எதிா்தரப்பினா் பராமரிப்பு செய்வதோடு, ஊராட்சியில் தீா்வை ரசீதும் பெற்றுள்ளாராம். இது தொடா்பாக புகாா் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லையாம்.
இந்நிலையில் அவா் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை முன் தொடா் உண்ணாவிரதம் இருக்க போவதாக சனிக்கிழமை மனைவி, மகளுடன் வந்தாா்.
இதையடுத்து சாத்தான்குளம் போலீஸாா் அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று சமாதான பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மூக்காண்டி போராட்ட எண்ணத்தை கைவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றாா்.