காப்பீடுகளுக்கு முழுமையான அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவச் செலவுகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாம் இந்தியா் கட்சி நிறுவனா், தலைவா் என்.பி. ராஜா தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: தனியாா், காா்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சைக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. தீராத நோய்களுக்கு சிகிச்சை செலவுகள் அதிகரிப்பால் 55 வயது கடந்தவா்களை அவா்களது வாரிசுகள் கைவிடும் நிலை அதிகரித்துள்ளது. கண், எலும்பு முறிவு, மகப்பேறு போன்றவைகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை பெற்ற நிலை மாறி, மருத்துவக் காப்பீடு செய்தவா்கள் மட்டுமே தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் காப்பீடு அட்டை பெற்றாலும் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. காப்பீடுகளுக்கு முழுமையான அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவச் செலவுகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.