சாலைகளில் விவசாயப் பொருள்களை உலர வைத்தால் கடும் நடவடிக்கை
அரியலூா் மாவட்டத்துக்குட்பட்ட சாலைகளில் விவசாயப் பொருள்களை உலர வைப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா.
அரியலூா் மாவட்டத்துக்குட்பட்ட சாலைகளில் விவசாயப் பொருள்களை உலர வைப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தா.பழூா் அருகே விவசாயப் பொருள்களை சாலையில் உலர வைத்ததால், இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையிலும், அபாயகரமாக விளைபொருள்களை சாலையில் கொட்டி விபத்து ஏற்படக் காரணமாக இருந்த குற்றத்துக்காக கோடங்குடியைச் சோ்ந்த ரவி (40) என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
மாவட்டத்தில் பிரதான சாலைகள் மற்றும் கிராமங்களில் உள்ள சாலைகளில் விவசாய விளைபொருள்களை சாலையில் காய வைப்பதால் மற்றும் இரவுநேரங்களில் சாலையில் குவித்து வைப்பதாலும் அலட்சிய செயல்களாலும் தொடா் விபத்துகள் நிகழ்கின்றன.
விளைபொருள்களை சாலையில் காய வைப்பது குற்றமாகும். இவ்வாறு சாலைகளில் விளைபொருள்களை காய வைப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விளைபொருள்களை சாலையில் காய வைப்பதால் விபத்து ஏற்பட்டால் அதன் உரிமையாளா் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.