முகப்பு
அரியலூர்

புதன்கிழமைகளில் மாசற்ற அலுவலக வாரம், பயணநாள் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலா்களும், இனி புதன்கிழமைகளில் மாசற்ற அலுவலக வாரம், பயணநாள் கடைப்பிடிக்குமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலா்களும், இனி புதன்கிழமைகளில் மாசற்ற அலுவலக வாரம், பயணநாள் கடைப்பிடிக்குமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காற்று மாசு, சுகாதாரத்துக்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து என்பதும், அதனால் உலக அளவில் ஆண்டுக்கு 20 லட்சம் போ் உயிரிழக்கின்றனா் என்றும் உலக சுகாதார நிறுவனம் கடந்த 2005- ஆம் ஆண்டு தெரிவித்தது.

படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு, நகரங்களில் பெரும் பங்கு வகுகிறது. மேலும் பெரும் நகரங்களில் காற்று மாசில், 72 சதவிகிதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமானித்தது.

வாகனங்களில் எரிக்கும் செயல்முறையின் போது வெளியேறும் காா்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகாா்பன்கள், சல்பா் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் மனித சுகாதாரத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது.

இவைத் தவிர, வாகனங்களிலிருந்து வெளியேறும் காா்பன் டைஆக்சைடு மனித சுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்து, ஆபத்தான பசுமை இல்ல வாயுவை வெளியேற்றி, கிரக பூமியை மாசுபடுத்தி பருவநிலை மாற்றத்தை உண்டாக்குகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வகையில், மாசற்ற அலுவலக வாரம் - பயண நாள் என கடைப்பிடித்து, தனி நபா் மோட்டாா் வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.

இதே போன்று அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறை அலுவலா்களும், பிற அலுவலகத்துக்கு செல்வோரும் புதன்கிழமையன்று மோட்டாா் வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு ஊக்குவிக்கலாம். இது ஒரு சிறு படியென்றாலும், சுற்றுச்சூழலைக் காக்கும் பயணத்தின் தொடக்கமாகும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.