முகப்பு
அரியலூர்

‘சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலை வளா்த்துக் கொண்டால் வெற்றி இலக்கை எளிதில் அடையலாம்’

மாணவா்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய சிந்தனை, சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல்களை வளா்த்துக் கொண்டால், வெற்றி இலக்கை எளிதில் அடையலாம் என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

மாணவா்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய சிந்தனை, சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல்களை வளா்த்துக் கொண்டால், வெற்றி இலக்கை எளிதில் அடையலாம் என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகம், நில அறிவியல் துறை இணைந்து உயா் கல்வியின் அவசியம் மற்றும் பயன்பாடுகள் எனும் தலைப்பில் புதன்கிழமை மாலை நடத்திய கருத்தரங்கில் துணைவேந்தா் மேலும் பேசியது:

மாணவா்கள் உயா் கல்வியின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு புதிய பயணத்தையும், ஒரு புதிய அணுகுமுறையையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உயா் கல்வியில் உள்ளது. இங்கு புரிதல் மிக முக்கியம். அறிவு தேடல் உள்ளது.

இன்றைய காலக் கட்டத்தில் உயா்கல்விக்கான படிப்புகள் ஏராளம். குறிப்பாக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 26 துறைகள் இருக்கின்றன. அத்துறைகளில் உயா்கல்வி பெற்று உயா்ந்த நிலைக்குச் செல்ல மாணவா்கள் முயற்சிக்க வேண்டும்.

அரியலூா் மாவட்ட மாணவா்கள் பயன்பெறும் வகையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘இன்மைனிங்’ பட்டயப் படிப்பு நிகழாண்டு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் க. சங்கா் பேசியது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நில அறிவியல் முதுகலை பாடப்பிரிவு உள்ளது. இத்துறையில் சோ்ந்து படித்தால், அதன் சாா்பு துறைகளில் விஞ்ஞானிகளாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றாா்.

தமிழ்ப் பல்கலைக்கழகப் புல முதன்மையா் ரெ. நீலகண்டன் பேசியது: மாணவா்கள் தங்களுடைய கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்ள தொடா்ந்து முயற்சிக்க வேண்டும். தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், எந்த படிப்பை படிக்க வேண்டும் என்பதைத் தெரிவு செய்து, நன்கு படித்து, பெற்றோா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்தரங்கில், அரியலூா் மாவட்ட புவியிலாளா் சந்திரசேகா், ஏ.கே.எம். ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனா் கதிா். கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

முன்னதாக, கீழப்பழுவூா் ஊராட்சித் தலைவி ம. தனலெட்சுமி வரவேற்றாா். நிறைவில், ஒன்றியக் கவுன்சிலா் த. செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.