கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சோழ மாமன்னா் ராசேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்ன் நினைவாக அரியலூா் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக நிறுவி, ஆட்சி செய்தாா். மேலும், சோழப் பேரரசின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக உலகப் புகழ்பெற்ற பிரகதீஸ்வரா் கோயிலை இங்கு அவா் கட்டினாா்.இந்தக் கோயில், பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராசேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் வந்த சோழ மன்னா்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகை மேட்டில் முதல்கட்ட அகழாய்வுப் பணி அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில், அரண்மனை இருந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் மற்றும் தொல்லியல் பொருள்கள் கிடைத்தன. அரண்மனை கட்டடம் இருந்ததற்கான செங்கல் சுவா், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலான ஓடுகள், சீன நாட்டு ஓடுகள், மண் பானை ஓடுகள், சிறிய அளவிலான ஆணி உள்ளிட்ட அரிய பொருள்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியதையடுத்து, அகழாய்வுப் பணியை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மாளிகைமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், அரியலூா் ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி ஆகியோா் ஆய்வு செய்து பணிகளை தொடக்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இரண்டாம் கட்ட அகழாய்வில் சோழா் காலத்து கட்டடங்கள் இருந்ததற்கான அடையாளங்கள், பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.