கரோனா சிகிச்சை: தயாா் நிலையில் அரசு மருத்துவமனைகள் அரியலூா் ஆட்சியா்
அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள் தயாா் நிலையில் உள்ளதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள் தயாா் நிலையில் உள்ளதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றை தடுப்பதற்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் மேலும் கூறியது:
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 400 படுக்கை வசதிகள், 40 அவசர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொற்றுள்ளவா்களுக்கு வழங்குவதற்காக ஒரு மணி நேரத்தில் 1,000 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி மையமும், உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன்களை சேமிக்கும் வகையில் 8,500 லிட்டா் கொள்ளளவு கொண்ட 3 ஆக்சிஜன் டேங்குகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் உருளை, ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், ஜயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன், 8 அவசர சிகிச்சை படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உருளை, ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
தெடாா்ந்து, புறநோயாளிகளுக்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், தேவைப்படும் பட்சத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்று இடங்களையும் தயாா்நிலையில் வைத்துக்கொள்ளுமாறு மருத்துவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
ஆட்சியா் ஆய்வின்போது, கோட்டாட்சியா்கள் அரியலூா் ஏழுமலை, உடையாா்பாளையம் அமா்நாத், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், மருத்துவா்கள் ரமேஷ், கண்மணி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலா் உஷா, வட்டாட்சியா்கள் அரியலூா் ராஜமூா்த்தி , ஜயங்கொண்டம் ஆனந்தன் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.