முகப்பு
புதுக்கோட்டை

சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 11ஆம் வகுப்பு படித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தி

Updated On : 22 நவம்பர், 2021 at 6:50 PM
ஆயுள் தண்டனை பெற்ற ராஜ்குமார்.
பகிர்:

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 11ஆம் வகுப்பு படித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கங்காணிப்பட்டி அருகேயுள்ள பரவாமதுரையைச் சேர்ந்தவர் சின்னாண்டி மகன் ராஜ்குமார் (34). இவருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து சிறுமியை மிரட்டி கருவைக் கலைக்கவும் முயற்சித்துள்ளார் ராஜ்குமார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார், ராஜ்குமாரைக் கைது செய்தனர்.

மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அரசு சிறப்பு வழக்குரைஞர் த. அங்கவி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஆர். சத்யா திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போக்சோ சட்டப் பிரிவில் இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும், மயக்க மருந்து கொடுத்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

தற்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு நிதி வழங்கியுள்ளது. தற்போது மேலும் ரூ. 1.50 லட்சம் வழங்கிட நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.