முகப்பு
தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி முடிக்கப்படும் 

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி முடிக்கப்படும் என்றார் வேளாண் துறைச் செயலரும், தூர்வாரும் பணி சிறப்புக் கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி.

Updated On : 26 மே, 2020 at 3:24 PM
பகிர்:

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி முடிக்கப்படும் என்றார் வேளாண் துறைச் செயலரும், தூர்வாரும் பணி சிறப்புக் கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து வரும் அவர் தென்னமநாடு கிராமத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 

மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறப்பதற்குத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

Advertisement

டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிக்காக ரூ. 67 கோடியும், குடிமராமத்து பணிக்காக கிட்டதட்ட ரூ. 500 கோடியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 58 கோடி மதிப்பில் 274 பணிகள்  மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், ஊரக வளர்ச்சித் துறை மூலம் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.137 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வருவதற்கு முன்பாக அனைத்து ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்கள் தரமாகத் தூர் வாரப்படும்.  

குறிப்பாக கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றடைவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அலுவலர்கள் முழுவீச்சில் பணியாற்ற வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது  என்றார் ககன்தீப் சிங் பேடி.

அப்போது மாவட்ட ஆட்சியர் ம கோவிந்த ராவ், பொதுப் பணித் துறைக் கண்காணிப்புப்  பொறியாளர் அன்பரசன்,  வேளாண் துறை இணை இயக்குநர் அ. ஜஸ்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.