முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையைக் காவல்துறையினர் 30 மணி நேரத்தில் சனிக்கிழமை மீட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையைக் காவல் துறையினர் 30 மணி நேரத்தில் சனிக்கிழமை மீட்டனர். 

தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (24 ). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அக். 4-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு அக்டோபர் 5-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

Advertisement

இந்நிலையில் இக்குழந்தையை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஒரு பெண் கட்டைப் பையில் வைத்து கடத்திச் சென்றார்.

இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

தொடர் விசாரணையில் பட்டுக்கோட்டையில் குழந்தையைக் கடத்தி சென்ற பெண்ணை தனிப்படையினர் சனிக்கிழமை பிற்பகல் பிடித்து, குழந்தையை மீட்டனர்.

குழந்தையை கடத்திச் சென்ற பெண் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜி (37) என்பதும், தனது மூன்றாவது கணவனுக்கு இக்குழந்தையைக் காட்டி சொத்துகளைப் பெறுவதற்காக கடத்தி வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அக்குழந்தை அவரது பெற்றோரிடம் காவல் துறையினர் சனிக்கிழமை மாலை ஒப்படைத்தனர்.

மேலும் விஜியை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை தஞ்சாவூர் ராசா ராசா அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு மாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு வந்தபோது மக்கள் கைதட்டி வரவேற்றனர். மேலும் காவல் துறையினருக்கும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் குணசேகரன் - ராஜலட்சுமியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குழந்தையை ஒப்படைத்தார்.

குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்ட தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments