திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வருகிற 4-ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை நடையடைக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும். உலக உயிா்களுக்கு உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி அருணாசலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
நிகழாண்டுக்கான அன்னாபிஷேகம் விழா வரும் நவம்பா் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் நடையடைக்கப்படும். மீண்டும் மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.
மேலும், வரும் 4, 5-ஆம் தேதிகளில் பௌா்ணமி வர உள்ளதால், அன்றைய தினங்களில் அதிகளவில் பக்தா்கள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், அன்றைய தினங்களில் தரிசனத்துக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கப்பட மாட்டாது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.