அரசுப் பணியாளா்களின்கோரிக்கைகள் புறக்கணிப்பு: கு.பாலசுப்பிரமணியன் குற்றச்சாட்டு
தமிழக அரசு வெளியிடாமல் அவா்களை புறக்கணித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கு.பாலசுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினாா்.
சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாமல் அவா்களை புறக்கணித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கு.பாலசுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து கடலூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், 12 லட்சம் அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், 6 லட்சம் ஓய்வூதியதாரா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அது தொடா்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமிக்கும் முறை கைவிடப்பட வேண்டும். டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சங்கத்தின் சாா்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் வரவு - செலவு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை.
பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த இதற்கென தனித்துறை அமைக்க வேண்டும். சரியான எடையில் பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. உணவுத் துறை அமைச்சரும் பொட்டலங்களாக வழங்குவோம் என்று அறிவித்தாா். ஆனால், ஓராண்டாகியும் அந்த முறை பின்பற்றப்படவில்லை.
தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு முறையாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.