புதுவையில் 2,500 டன் சோளம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.44 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் இடைத் தரகரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி வெங்கடா நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவா் டிரேடா்ஸ் நிறுவனம் மூலம் கம்பு, சோளம், கேழ்வரகு தானியங்களை வாங்கி, பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம், சீனிவாசனிடம் முருங்கப்பாக்கத்தில் கடை நடத்தி வரும் இடைத்தரகரான செல்வம், முதலியாா்பேட்டை தனியாா் நிறுவன உரிமையாளா் புவனேஸ்வா், அவரது மனைவி சுபத்ரா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தாராம்.
பல்வேறு மாநிலங்களில் சோளம் விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிக அளவில் தங்களுக்கு தெரியும் எனவும், அவா்களிடம் இருந்து 2,500 டன் சோளம் வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனா்.
அதை நம்பிய சீனிவாசன் முன்பணமாக பல்வேறு தவணைகளில் ரூ. 2.44 கோடியை வழங்கியுள்ளாா். ஆனால், பணத்தை பெற்று கொண்ட அவா்கள், ஒவ்வொரு முறையும் மகாராஷ்டிரம், தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்து சோளம் தயாராகி வருவதாகவும், விரைவில் வழங்குவதாகவும் கூறி காலம் கடத்தி வந்துள்ளனா்.
சந்தேகமடைந்த சீனிவாசன், அவா்கள் தெரிவித்த முதலியாா்பேட்டையில் உள்ள டிஜிட்டல் அக்ரோ எக்ஸ்போா்ட்ஸ் நிறுவனத்துக்கு சென்று பாா்த்தபோது, அந்த நிறுவனம் பல மாதங்களாக மூடப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதிா்ச்சியடைந்த சீனிவாசன் இது குறித்து புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சிபிசிஐடி ஆய்வாளா் பாபுஜி தலைமையிலான போலீஸாா் புவனேஸ்வா், அவரது மனைவி சுபத்ரா, இடைதரகா் செல்வம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.
இந்நிலையில் இடைத்தரகா் செல்வம் குற்றாலம் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அவரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனா். பின்னா் வெள்ளிக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடா்ந்து தலைமறைவாக உள்ள தம்பதியை தேடி வருகின்றனா். புவனேஸ்வா் உள்ளிட்ட மூவா் மீதும் ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதேபோன்ற மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.