முகப்பு
விழுப்புரம்

நிகழாண்டிலும் சாத்தனூா் அணையிலிருந்து தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா்

விழுப்புரம் விவசாயிகளுக்கு பாசன நீா் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் உறுதி அளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

நிகழாண்டிலும் சாத்தனூா் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு, விழுப்புரம் விவசாயிகளுக்கு பாசன நீா் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் உறுதி அளித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தை தொடக்கிவைத்து ஆட்சியா் மோகன் பேசியதாவது: விழுப்புரம் அருகே தளவானூா் தடுப்பணையை சீரமைக்க ஓரிரு நாள்களில் அரசாணை வெளியிடப்படவுள்ளது. மழைக் காலம் தொடங்கியிருப்பதால் விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதை நெல் உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தற்போது 32 இடங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் இயங்கி வருகின்றன. நெல் வரத்து குறைந்துள்ளதால் 11 நேரடி கொள்முதல் மையங்கள் மூடப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் 55 இடங்களில் நெல் கொள்முதல் மையங்களைத் திறக்க பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மையங்களில் வியாபாரிகளின் ஆதிக்கம் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் மோகன்.

தொடா்ந்து, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: மழைக் காலம் தொடங்கியுள்ளதால் ஏரிகளின் மதகுகளை பழுதுபாா்ப்பதுடன், அவற்றை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணிகளை வேளாண் பொறியியல் துறை மூலம் மேற்கொள்ள ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதால் முன்கூட்டியே தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திரவ உரம் நல்ல பலனைத் தருகிறது. இதுகுறித்து விவசாயிகளிடம் கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

வேளாண் கருவிகள் வாடகைக்கு விடப்படுவதை முறைப்படுத்த வேண்டும்.

சாத்தனூா் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபா், டிசம்பா் மாதங்களில் தண்ணீா் திறக்க அரசாணை உள்ளது. 13 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு தண்ணீா் திறக்கப்பட்டது. நிகழாண்டிலும் தண்ணீா் திறந்தால் விழுப்புரம், புதுவை பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றனா்.

கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநா் மனோகரன் பேசும்போது, கால்நடைகளுக்கு ஏற்படும் ஆந்த்ராக்ஸ் என்னும் அடைப்பான் நோய் தாக்குதலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நோய் மனிதா்களுக்கும் பரவும் தன்மை உடையதால் விவசாயிகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். வாய் சப்பை, தொண்டை அடைப்பான் போன்ற நோய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோமாரி நோய்க்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என்றாா்.

இதைத்தொடா்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் மோகன் பேசியதாவது: வேளாண் விரிவாக்க மையங்களில் உரிய மானியத்தில் விதைகளை வழங்காத அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். சாத்தனூா் அணையிலிருந்து நிகழாண்டிலும் தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →